மனித உயிரின் உருவாக்கம்

மின்னஞ்சலில் வந்த ஒரு வீடியோ. ஒரு மனித உயிர் உருவாவதை மிகவும் அழகாக தெளிவாக விளக்கி இருக்கிறார்கள்.
என்னத்த சொல்ல?

மக்கள் வரிப்பணத்தை 
பங்குபோடும் அரசியல்வியாதிகள் 
தெரிந்தும் ஓட்டுப் போடும் 
புரிந்துகொள்ள முடியாத மக்கள்!

கல்வியை காசாக்கும்
தொழிற்சாலைக் (கல்வி?)கூடங்கள்
வேறு பள்ளிகளே இல்லாததுபோல்
வரிசை கட்டி நிற்கும் பெற்றோர்கள் !

நோயை பேய்போலாக்கி 
பணம்பறிக்கும் மருத்துவர்கள்
உயிர் பயம் உள்ளுக்குள் உறுத்த 
பிதுங்கி நிற்கும் நோயாளிகள்!

செய்வதறியாது திணறிப்போய் 
உதவி என்று நம்பி சென்றால் 
அஞ்சுக்கும் பத்துக்கும்
அல்லுப்போடும் காவலர்கள்!

சொல்லிக்கொண்டே போகலாம்
கேட்கும் திராணியிருந்தால்
எவ்வளவு பட்டாலும் திருந்தாத நாடு 
நான் சொல்லியா விடியப் போகிறது?

தமிழை மட்டுமே நம்பி ஒருவர் வாழ முடியுமா?

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த என் பல நண்பர்களுக்கு தமிழ் சரளமாக படிக்கவும் எழுதவும் தெரியாது ஆனால் இது அவர்களது அன்றாட வாழ்கையை இம்மி அளவும் பாதித்ததாக தெரியவில்லை. நம் அனைவர் மனதிலும் உள்ள ஒரு பொதுவான கருத்து, தமிழில் பல இலக்கிய படைப்புகள் இருக்கின்றன என்பதற்கு மேலாக என்ன இருக்கிறது? தமிழ் கற்றால் பேசினால் இன்றைய நவீன யுகத்தில் கிடைக்கும் அனுகூலங்கள் என்ன? தமிழை ஒரு மொழியாக அதை விட ஒரு தன்மான உணர்வாக பார்க்கிறோமே தவிர, தமிழ் சார்ந்த தொழில் என்று எதாவது ஒன்று இந்த உலகமயமாக்கல் புயலை தாங்கி நிற்கிறதா? நமது விடை இல்லை அல்லது தெரியாது என்பதாக இருக்கும். விதன்டா வாதத்திற்கு வேண்டுமானால் யாராவது விளக்கம் சொல்ல முயற்சிக்கலாம். 

சமீபத்தில் நான் பார்த்த சில தொலைக்காட்சி நிகழ்சிகளும் உரையாடல்களும் நம் தாய் மொழி தமிழ் மீது பல எண்ண மாற்றங்களை விட்டுச் சென்றிருக்கின்றன. தமிழை காக்க தமிழ் வழிக்கல்வி அவசியம் என்று பலர் சொல்கிறார்கள். தமிழ் வழிக்கல்வி என்பது எந்த அளவிற்கு சாத்தியம்? இன்றைய தமிழ் வழிக்கல்வி முறையில் என்ன நடக்கிறது? Maths என்பதை கணிதம் என்றும், Physics என்பதை இயற்பியல் என்றும், Chemistry என்பதை வேதியல் என்றும் மொழிபெயர்த்து கற்பிக்கிறார்கள், அதுவும் அரைகுறையாக. மேலோட்டமாக மொழி பெயர்க்க முடிகிறதே தவிர பாடத்தின் மூலத்தை மொழிபெயர்க்க முடிகிறதா? முடிவதில்லை. 

அது என்ன பாடத்தின் மூலத்தை மொழி பெயர்ப்பது? என்னதான் computer என்பதை கணிப்பொறி என்று சொல்லிக்கொடுத்தாலும், command என்பதை கட்டளை என்று மொழிபெயர்த்தாலும் அதை கம்ப்யூட்டரில் பிரகயோகிக்க முடியாது, செயல்முறையில் நீங்கள் ஆங்கிலம் தான் உபயோகப்படுத்தியாக வேண்டும். அதே போல் physics equation-யோ  chemistry equation -யோ தமிழில் எப்படி மொழிபெயர்க்க முடியும்? உதாரணத்திற்கு H2O என்பதை தமிழில் எப்படி மொழி பெயர்க்க முடியும்?

தமிழ் உன்னதமான மொழி, உயர்வான மொழி, இனிமையான மொழி, உயர் தனி செம்மொழி மறுப்பதற்கில்லை. பிறகு ஏன் ஆங்கிலத்தையும் பிற மொழிகளையும் நம் மக்கள் நாடி செல்கிறார்கள்? காரணம் தொழிற்கல்வி தமிழ் முறையில் குறைவு அப்படியே இருந்தாலும் தமிழ்நாட்டை தாண்டி வேலை வாய்ப்புகள் குறைவு. ஆங்கில வழி தொழிற்கல்விகள் வாங்கித்தரும் வேலை வாய்ப்புகளையும், சம்பளத்தையும் தமிழ் வழி தொழிற்கல்வி பலருக்கு வாங்கித்தருவதில்லை.

ஒரு மொழி, தன்மான உணர்வு என்பதை காட்டிலும் தமிழின் அவசியம் இன்றைய தலைமுறையினருக்கு என்ன? இதை இதையெல்லாம் செய்தால்தான் தமிழ் வளரும் என்றால் தமிழ் என்றோ அழிந்திருக்கும், தமிழ் ஒரு அழியா மொழி. தமிழில் உள்ள குறைகளை சொன்னால் உடனே நீங்கள் தமிழின துரோகி ஆகி விடுவீர்கள். வெளி நாடுகளில் வேலை செய்தாலோ, பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்கு சென்றாலோ தமிழனுக்கு அடிமை புத்தி என்பார்கள். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று அன்றே சொன்னவன் தமிழன்.  உலகமயமாக்கல் என்பதை இவ்வுலகம் அறிவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கடல் தாண்டி வணிகம் செய்தவன் தமிழன்.

எனது கருத்து, பல நூற்றாண்டுகளாக பலரால் வளர்ந்த தமிழ் ஒரு காலகட்டத்தில் திராவிட கட்சிகள் கையில் சிக்கி, தமிழை ஏதோ அவர்கள் மட்டுமே வளர்க தகுதி பெற்றவர்கள் என்பது போன்ற ஒரு மாயையை உருவாகி விட்டது. ஆங்கில மோகம் கூடாது ஹிந்தி எதிர்ப்பு என்று ஏதோதோ கூறி தமிழனை தமிழ்நாட்டிர்க்குள்ளாகவே முடக்கி விட்டார்கள். தமிழ் வாழவைக்கும் என்று சொல்கிறார்களே தவிர, நான் தமிழால் முன்னுக்கு வந்தவன், தமிழால் என் தொழில் சிறந்தது, தமிழ் மட்டுமே என்னை வாழ வைக்கிறது என்று யார் சொல்லியும் நாம் கேள்வி படுவதில்லை.

இந்த பதிவை கூட நான் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய அது தான் unicode தமிழாக மாறுகிறது. ஒரு மொழி, மொழி என்பதையும் தாண்டி பரவ வேண்டும், அனைவராலும் விரும்பப்பட வேண்டும் என்றால் இன்றைய காலச் சூழலுக்கு அது தொழில் நுட்பத்தாலும் விஞ்ஞானத்தாலும் மட்டுமே முடியும். தமிழ் சார்ந்த கண்டுபிடிப்புகள் வர வேண்டும் உதாரணமாக தமிழில் மட்டுமே இயங்கும் ஒரு கணினியும் இயங்கு மென்பொருளும் (Operating system) உருவாக்கப்பட வேண்டும். 

தமிழ் கல்வி என்பது மொழி பெயர்கப்படாமல் அதன் மூலமே தமிழாய் இருக்க வேண்டும். தமிழ் என்பது வெறும் மொழி, பழைய இலக்கியம், அரசியல் என்பதை தாண்டி தொழில் நுட்பத்தின் அவசியமாக அறியப்படும்போது, பிற நாடுகளில் தமிழ் கற்பிக்கப்பட்டு அவர்கள் தங்கள் மொழி அழிகிறது என்று கூறும் நிலமை வரலாம். இப்படி ஒரு நிலமை வந்தால் நாம் யாரையும் சென்று தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அதெல்லாம் முடியாது தமிழ் என்பது மொழி அது எப்படி தொழில்நுட்பமாக முடியும் என்று எண்ணினால் ஆங்கில வழி தொழிற்கல்வி கற்பதையோ தமிழை புறக்கணிப்பதையோ தவிர்க்க முடியாது. 

அவள்...


சிரைக்கப்படாத புருவங்கள்
நறுக்கப் படாத கார் கூந்தல்

மெழுகு தோய்க்காத பருக்கள்
சாயம் பூசாத ஈர உதடுகள் 

இதம் பேணும் இனிய விரல் 
கொஞ்சு தமிழ் பேசும் குரல்

நான் பார்க்கும் பெண்களெல்லாம் 
வேற்று கிரக வாசிபோல் திரிய 

நான் தேடும் நிஜப் பெண்ணே
எங்கிருக்கிறாய் நீ?உலகம்: இவ்வளவு சிறியதா?

நாம் அனைவரும் இயற்கையை மறந்து வெகு நாட்கள் ஆகி விட்டது. இந்த உலகம் அதில் வாழும் மனிதர்கள், மிருகங்கள், மலைகள், கடல், எரிமலைகள் அனைத்தும் இயற்கைக்குள் அடக்கம். மனிதர்களாகிய நாம் காடுகளை அழித்து நகரங்களை உருவாக்கினோம். தொழிற்சாலைகளையும் வாகனங்களையும் பெருக்கி காற்றையும் நீரையும் மாசு படுத்தினோம்.

காலம் தவறி மழை பெய்கிறது, அளவுக்கு மீறி வெயில் அடிக்கிறது, பருவ நிலை மாற்றம், குளோபல் வார்மிங் என்று ஏதோதோ சொல்கிறோம். மரங்களை வளர்ப்போம், மாசுக்களை குறைப்போம், இயற்கையை காப்போம் என்று கிளம்பிவிட்டோம் ஒன்றை மறந்து விட்டோம். இயற்கையை நாம் காப்பதில்லை இயற்கை தான் நம்மை காத்துக்கொண்டிருக்கிறது.

சற்று யோசித்து பாருங்கள் கோடை வெய்யிலுக்கு மின் விசிறி, குளிர் சாதன பெட்டி, இளநீர், சர்பத் என்று சூட்டை தணிக்க பல விசயங்களை செய்கிறோம். ஆனால் இயற்கை நினைத்தால் மதிய மொட்டை வெயிலை கூட ஐந்தே நிமிடங்களில் மழை பொழிவின் மூலம் குளிர வைத்து விடும். மனிதன் ஏற்படுத்திய அனைத்து மாசுக்களையும் இயற்கை நினைத்தால் குறுகிய காலத்திற்குள் அகற்ற முடியும். இயற்கையின் சக்தி மனிதனின் அறிவுக்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்டது.

நாம் வாழும் இந்த உலகம் இயற்கையின் ஒரு சிறிய துகள் மட்டுமே. நாம் மைக்ரோஸ்கோப்பின் வழியே மட்டுமே காண முடியும் நுன்னுயிர் எவ்வளவு சிறியதோ, அதை விட இயற்கையின் முன் பன்மடங்கு சிறியது நாம் வாழும் இந்த பூமி. கீழே உள்ள படத்தில் படம்[1] சூரியன், பூமி, வியாழன் மற்றும் சில கிரகங்களை ஒப்பிட்டு காட்டுகிறது அதில் ஒரு சிறிய புள்ளி போல் தெரிகிறது பூமி. படம்[2] பால்வெளியை காட்டுகிறது அதில் ஒரு சிறிய புள்ளி போல் தெரிகிறது சூரியன், அதில் பூமி தெரிவது கடினம் துகளோடு துகளாக போயிருக்கும்.

இந்த இரண்டு வீடியோக்களையும் முழுமையாக பாருங்கள் உண்மையில் நாம் வாழும் உலகம் எவ்வளவு சிறியதென்று உங்களுக்கு தெளிவாய் புரியும்.
நீங்கள் பார்த்த இந்த விடியோக்கள் மனித அறிவிற்கு தெரிந்த அளவுதான், இயற்கை இதையும் தாண்டி அளப்பரிய சக்தி வாய்ந்தது, கணக்கில் அடங்காதது. மனிதன் தன் அறிவுக்கு அப்பாற்பட்ட சக்தியை கடவுள் என்றான், என்னை பொறுத்த வரை அந்த சக்தி இயற்கை. நாம் ஒப்புகொண்டாலும் மறுத்தாலும் நம் வாழ்வின் அன்றாட செயல்பாடுகளும்,  நிகழ்வுகளும் நம் அறிவுக்கு அப்பாற்பட்ட சக்தியின் கட்டுப்பாட்டில் தான் நடக்கின்றது.

அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவான இந்த பூமியை மனிதன் ஆள்கிறான். விஞ்ஞானத்தின் மூலம் இயற்கையை வென்று விட துடிக்கிறான். சிட்டுக்குருவிகளை செல்போன் டவர் வைத்து சிதைக்கிறான், விலங்குகளின் வாழ்வாதரமான காடுகளுக்குள் குடிபுகுந்து, யானைகளையும், சிறுத்தைகளையும் குறை கூறுகிறான். தனக்கு சொந்தம் இல்லாத இந்த பூமியை கூறு போட்டு விற்கிறான். இன்னும் ஒரு படி மேலே போய் நிலவிலும், மற்ற கிரகங்களிலும் கூட இடத்தை விற்க ஆரம்பித்து விட்டான்: Moon Estates.

மனிதர்களுக்குள் எவ்வளவு போட்டிகள், பொறாமைகள், சண்டை சச்சரவுகள். எதற்காக பிறந்தோம், எதற்காக வாழ்கிறோம், எதை நோக்கி செல்கிறோம் என்றே தெரியாமல் பல சந்ததிகள் வந்து சென்றாகிவிட்டது. இவ்வுலகம் மிகச்சிறியது நாம் வாழும் இவ்வாழ்க்கை மிக மிக சிறியது. முடிந்த வரை இயற்கைய நேசிப்போம், மற்ற ஜீவராசிகளையும் நேசிப்போம் அதற்கு முன் நம் சக மனித்ர்களை நேசிப்போம்!

அப்பன் காசு

நான்கு வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம், என்னிடம் அப்போது பைக் இல்லை கல்லூரிக்கு பேருந்தில் தான் சென்று கொண்டிருந்தேன். பேருந்தில் இருந்து இறங்கி கல்லூரிக்கு அரை கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். அப்படி நடந்து செல்லும்போது என் சக வயது மாணவர்கள் பல்சர்களிலும், கரிஸ்மாக்களிலும் சீறிக்கொண்டு செல்லும் போது மனதுக்குள் தோன்றும் "ம்ம்ம்ம்...அப்பன் காசு என்னமா சீன் போட்ராணுக".

சனிக்கிழமைகளில் நண்பர்கள் புடைசூழ சினிமாவிற்கு செல்வது வழக்கம். நாங்கள் ஆறு பேர் எங்கு சென்றாலும் எப்போதும் ஒன்றாக செல்வோம், அதனால் மூன்று பைக் வேண்டும். ஆறு பேரில் இரண்டு பேரிடம்தான் பைக் இருக்கும் எனவே மூன்றாவது பைக்கை ஏற்பாடு செய்வதில் தான் எப்போதும் சிக்கல். அப்பா வீட்டில் இருந்தால் கெஞ்சி கூத்தாடி அவரது பைக்கை வாங்கி செல்வேன் இல்லையென்றால் பைக் வைத்திருக்கும் நண்பர்களிடம் ஓசி வாங்க வேண்டும். எப்படியோ மூன்றாவது பைக்கை ஏற்பாடு செய்து ஆறு பேரும் கிளம்பினோம், வழியில் எங்களை பார்த்த ஒரு மொக்கை நண்பன் தானும் வருவதாக அடம் பிடிக்க வேறு வழி இல்லாமல் ஒரு பைக்கில் ட்டிரிப்பில்ஸ் அடித்தோம். போலீஸ் கண்ணில் சிக்காமல் செல்ல வேண்டும் என்பதற்காக பஸ்சுக்கு பின்னாலும் லாரிக்கு பின்னாலும் ஒதுங்கி ஒதுங்கி சென்றோம்.


டிராபிக் அதிகமாய் இருந்தது, போதாதென்று மழை வேறு மெலிதாய் தூர ஆரம்பித்தது கொஞ்சம் வேகமாய் செல்ல எத்தனித்த போது சரியாக சிக்னல் விழுந்தது. டிராபிக் நெரிசல், சிக்னல், தூறும் மழை, பைக்கில் ட்டிரிப்பில்ஸ், தூரத்தில் நின்றிருக்கும் போலீஸ்காரர் அனைத்தும் சேர்ந்து எரிச்சலை கொஞ்சம் கொஞ்சமாய் தூண்டிக்கொண்டிருக்க சர்ர்ர்ரர்ரென்று ஒரு கார் வந்து நின்றது. உள்ளே என் வயதோ இல்லை என்னைவிட இரண்டு மூன்று வயதோ கூட இருக்கும் ஒரு இளைஞன், கார் கண்ணாடி பாதி இறங்கியிருக்க சில் சில் என்று தெறிக்கும் அளவுக்கு பாட்டு சத்தம் வெளியில் கேட்டுக்கொண்டிருந்தது. மூன்று பைக்கில் ஏழு பேர் அவதி பட்டுக் கொண்டிருக்க ஒற்றையாய் காரில் அவன். என் பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த நண்பன் சொன்னான் "அப்பன் காசு மச்சி, என்னம்மா சீன் போட்ராணுக பாருடா".

அப்போது தான் மெலிதாய் இருந்த அந்த எண்ணம் வலுத்தது, சொந்தமாய் ஒரு வண்டி இல்லாமல் எவ்வளவு கஷ்டம்... படித்து முடித்து வேலைக்கு சென்று சம்பாதிக்க ஆரம்பித்ததும் ஒரு பைக்கோ காரோ வாங்க வேண்டும். ஆறேழு மாதங்கள் உருண்டன, கடைசி வருட தேர்வுகள் முடிந்தது அடித்து பிடித்து ஒரு நல்ல பன்னாட்டு நிறுவனத்தில் ஐந்திலக்க சம்பளத்தில் வேலையும் கிடைத்தது. பெரிய பைக் வாங்க நினைத்தாலும் அப்பாவின் உடன்பாடு இல்லாத காரணத்தால் ஸ்பிளென்டர் வாங்கினேன். மீண்டும் வருடங்கள் உருண்டன, ஒரு பெரிய பைக் வாங்கி விடுவது என்று முடிவு செய்தேன். நான் பைக் வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது நண்பன் ஒருவன் குழப்பினான் "டேய் நீ எழுபது எண்பதாயிரம் பைக்குக்கு செலவு பண்றதுக்கு பதிலா லோன் போட்டு கார் வாங்கிடு மச்சி. நல்ல யோசிச்சு பாரு இன்னும் ரெண்டு மூணு வருசத்துல்ல இன்கிரிமெண்டு புரமொசன்னு எப்படியும் உன்னோட சம்பளம் 50% அதிகம் ஆகிடும் அப்புறம் லோன் கட்றது ஒன்னும் பெரிய விஷயமா தெரியாது". அவன் சொன்னது கொஞ்சம் குழப்பினாலும் சரி தான் போலும் என்று தோன்றியது.


கார் என்று முடிவு செய்த பிறகு என்ன கார் வாங்குவது என்று தெரியவில்லை. கார் வைத்திருக்கும் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரிடமும் ஆலோசித்து பல கார் பற்றிய இணையதளங்களை அலசி ஆராய்ந்து, தட்டு தடுமாறி, குழம்பி பின்னர் தெளிவாய் இருப்பதாய் நானே நம்பி இந்த கார் வாங்குவது என்று முடிவு செய்தேன். பல பேருக்கு போன் செய்தால் "டேய் ராசா எத்தன தடவடா சொல்றது ஏதோ ஒரு காரை வாங்கித்தொளடா... உனக்கு வெளக்கம் சொல்லியே என் காரை பார்த்தா எனக்கே கடுப்பு ஆகுது. இப்பெல்லாம் பஸ்ல தான் போறேன் தெரியுமா" என்று நொந்து போகும் அளவுக்கு பல பேரை கேள்விகளால் துளைத்து எடுத்திருக்கிறேன். அடுத்து வாழ்கையில் முதன் முதலாக லோன் வாங்குகிறேன், அதையும் பல பேரிடம் விசாரித்து, சரி இந்த வங்கியில் கடன் வாங்குவது என்று முடிவு செய்தேன். பத்துப் பதினைந்து நாள் அலைந்து லோள் பட்டு லோன் வாங்கி கார் டீலரையும் ஒரு வழியாக்கி கடைசியில் ஒரு நல்ல நாள் பார்த்து காரை வாங்கிவிட்டேன்.

சனிக்கிழமைகளில் படத்துக்கு செல்லும் வழக்கத்தை இன்னும் விடவில்லை. என்ன இப்போது அவ்வளவு பெரிய நண்பர் வட்டாரம் இல்லை, அவன் அவனுக்கு நலம் விசாரிக்க கூட நேரம் இல்லாமல் இந்த அவசர யுகத்தில் தொலைந்து போய்க்கொண்டிருக்கிறோம். என்னுடன் வேலை செய்யும் சக நண்பன் தான் நேராக தியேட்டருக்கு சென்று டிக்கெட் எடுத்து வைத்து காத்திருப்பதாக சொல்ல நான் புது காரில் தனியாக கிளம்பினேன். வானம் மழை மேகங்களால் சூழ்ந்திருக்க காற்றும் சில்லென்று வீச கார் கண்ணாடியை மெலிதாய் இறக்கி விட்டு மிதமாய் வண்டியை ஓட்டியபோது அருமையாய் உணர்ந்தாலும் "என்னடா இது அவசர பட்டு கடன் வாங்கி கார் வாங்கிட்டமோ, கொஞ்சம் காசு சேர்த்துட்டு வாங்கியிருக்கலாமோ.." என்ற எண்ணமும் வந்து சென்றது. மழை மெதுவாக தூர ஆரம்பித்தது கொஞ்ச தூரம் சென்றதும் சிக்னல் விழுந்தது மெதுவாய் காரை நிறுத்தினேன். வலது புறம் ஒரு பைக், அதில் மூன்று பேர். அவர்களை பார்த்ததும் பழைய நினைவுகள் வந்து சென்றது ஒரு வேலை கார் இல்லையென்றால் நாமும் இப்படி தான் இருந்திருப்போமோ?

பைக்கில் இருந்தவர்கள் காரை உற்றுப்பார்த்தார்கள், பின்னால் அமர்ந்திருந்தவன் முன்னாள் இருந்தவனிடம் ஏதோ சொன்னான். ஒரு வேலை "அப்பன் காசு என்னமா சீன் போடறான் பாரு!" என்றிருப்பானோ?.

வானிலை அறிக்கை


கண்ணோடு கண் பார்த்தால்
மூளைக்குள் அடிக்கிறது
மின்னல்!

சற்றே விலகி சென்றால்
இதயத்தில் இடிக்கிறது
இடி!

நெருங்கி வந்து நின்றால்
உடலெங்கும் வியர்வை
மழை!

கொஞ்சம் சிரித்துப் பேசினால்
எண்ணங்கள் சுழன்று
சூறாவளி!

பருவ நிலைகளை காட்டும்
வானிலை அறிக்கை
அவள்!சந்திராயனும் உள்ளூர் கிழவியும்நிலவில் நீர் சந்திராயன் கண்டுபிடிப்பு சத்தமாய் பேப்பர் படித்தவனிடம் அப்பாவியாய் கேட்டது உள்ளூர் கிழவி "அப்போ நம்மூருக்கு சீக்கிரம் நல்ல தண்ணி பைப்பு வந்திருமா கண்ணு?"

உனக்கு இதே வேலையா போச்சு கெழவி போன வாரம் நதிகளை இணைக்குராங்கன்னு படிச்சப்பவும் இதே கேள்விய தான் கேட்ட இப்பவும் அதே கேள்விய கேக்குற போ கெழவி போயி வேலைய பாரு.

என்னமோ போ கண்ணு வெள்ளக்காரன் இருக்கறப்பவே வந்திரும்னு சொன்னங்க அதுக்கப்புறம் யார் யாரோ வந்துட்டு போயாச்சு, எனக்கு கொள்ளு பேரனும் வந்தாச்சு நல்ல தண்ணி பைப்பு இன்னும் வரல!

டெக்னாலஜி என்னமா வளந்திருக்கு இன்னும் பைப்பு வரல பருப்பு வரலைன்னு...அண்ணே ஒரு டீ ஒரு கிங்க்ஸ் அப்படியே ஒரு பாண் பராக் எவ்வளவு ஆச்சு? கேட்டுவிட்டு சில்லறையை துளவினான் இன்றைய இளைஞன்!
என்ன நீ இன்னும் எந்திரன் பார்கலியா?

"இந்த செமஸ்டர்ளையும் மேக்ஸ்ல பெயிலா?" ஆறு மாசத்துக்கு ஒருக்கா செமஸ்டர் ரிசல்ட் வரும்போது எங்கப்பா கேக்குற கேள்வி. இந்த கேள்வி அப்படியே என் காதுக்குள்ள போயி வயித்த ரீச் ஆகி அங்க இருந்து ஒரு எரிச்சல் கலந்த கோபம் கெளம்பி மேல வந்து கண்ணு வழியா ரிலீஸ் ஆகும். "மொன்ன ரோசதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல அடுத்த செமஸ்டர்லயாவது பாஸ் பண்ணுடா" சொல்லிட்டு போயிட்டே இருப்பாரு எங்கப்பா. எப்படியோ போராடி டிகிரி வாங்கி பல வருஷம் ஆச்சுன்னு வெய்ங்க.

எங்கப்பா கேக்குற அந்த கேள்விய தவிர வேற எந்த கேள்விக்கும் எனக்கு கோவம் வந்ததும் இல்ல வர்றதும் இல்லை. ஆனா அதை விட ரெண்டு மடங்கு கோபம் எனக்கு சமீபத்துல வந்துச்சு.  நண்பன் ஒருத்தன் நான் என்னவோ தேச துரோக குற்றம் செஞ்ச மாறி கேட்டான் "என்ன நீ இன்னும் எந்திரன் பார்கலியா?". அவன் கேட்ட விதம் எங்கப்பா கேக்குறத விட, சன் டிவில டிரைலர் போட்டு குடுக்கற டார்ச்சர விட கொடுமையா இருந்துச்சு. தொண்டை வரைக்கு வந்த ஒரு கெட்ட வார்த்தைய ரிட்டன் உள்ள அனுப்பீட்டு "இல்லடா இன்னும் பார்கல"ன்னு சொன்னேன். சனிக் கிழமை நான் பாட்டுக்கு எதாவது வார்த்தை பேசி, கடுப்பேத்திட்டடா வா சரக்கடிக்க போலாம்னு கூப்டுடான்னா... வேண்டாம்டா சாமி அடக்கியே வாசிப்போம்னு கமுக்கமாயிட்டேன். 

"இன்னைக்கு நைட்சோ போறேன் வர்றியாடா"ன்னு கேட்டான்... ஆஹா சனிக்கிழம ஏழரை விடாது போல இருக்குன்னு நெனச்சிட்டு, "டேய் நீ தான் ரிலீஸ் ஆன அன்னிக்கே முந்நூறு ரூபா குடுத்து பாத்தீலடா?"ன்னு நான் கேட்க, அவன் "இந்த மாறி ஒரு படம் இனிமே வருமான்னு தெரியல இந்த படத்த இன்னொரு தடவ தியேட்டர்ல பார்க்குறது தப்பே இல்லைடா. உனக்கும் சேர்த்து நானே டிக்கெட் எடுக்கறேன் போலாமா?"ன்னு கேட்டான்.

"டேய் நம்ம காலேஜ் படிக்கறப்போ புக்கு வாங்குனா காசு வீனா போகும்னு ஜெராக்ஸ் எடுத்து படிப்பியே அவனா நீ?"

"டேய் மச்சி படம் அந்த அளவுக்கு வொர்த்துடா... வர்றிய இல்லையா?"

"வரலன்னு சொன்னா விடவா போறே சரி போலாம்."

ஏற்கனவே இந்த படத்த தேவையான அளவுக்கு டிரைலர், விமர்சன பதிவுகள், படம் பாத்தவங்க சொன்ன கதைன்னு அலசிட்டதுனால அடுத்த படத்த தியேட்டர்ல பாத்துட்டு இந்த படத்த டிவில போடறப்போ பார்க்கலாம்னு இருந்தேன். ஒருத்தன் ஓசில டிக்கட் எடுத்து கூட்டிட்டு போறான் நமக்கு வேற முக்கியமான வேலையும் இல்ல... சரி போயி நம்ம மேல விழுந்த தேச துரோக கரைய போக்கிட்டு வரலாம்னு முடிவு செஞ்சேன்.

சும்மா சொல்லக்கூடாதுங்க படம் இத்தன தியேட்டர்ல ஓடியும் கூட்டம் இன்னும் வருது. ரொம்ப நாளைக்கு அப்புறம் தியேட்டர்ல சிறுசு பெருசு பொண்டு பொடுசுன்னு குடும்பத்தோட படம் பார்க்க மக்கள் வர்றாங்க. உள்ள போயாச்சு படமும் பாத்தாச்சு படம் நல்லா தான் இருந்துச்சு இன்னும் கொஞ்சம் நல்லா எடுதிருக்கலமோன்னு தோணுது...ம்ம்ம்ம் பதிவு எழுதறவன் என்ன வேணும்னாலும் எழுதலாம் பணம் போட்டு படம் எடுக்கரவனுக்கு தான் அதுல இருக்கற பிரச்சினை தெரியும். ஆனா வண்டி பார்கிங்ளையும் கான்டீன்ளையும் காச கொள்ளை அடிக்கிறாங்க. ஒரு நாலஞ்சு பேரு குடம்பத்தோட போயி படம் பார்க்கணும்னா கொறஞ்சது அறநூறு எழுநூறு ரூபாயாவது ஆகும். தப்புன்னு தெரிஞ்சும் மக்கள் ஏன் திருட்டு விசிடிய ஆதரிக்கராங்கன்னு இப்ப தான் புரியுது.

இது ரஜினி படம் மாறி இல்ல ஏன்னா கொஞ்சம் கூட மசாலாவோ அனல் பறக்கும் பஞ்ச் டயலாக்கோ இல்லை. சங்கர் படம் மாறியும் இல்ல ஏன்னா ஜென்டில் மேன், இந்தியன், முதல்வன் அளவுக்கு படம் பார்த்துட்டு வெளிய வரும்போது ஒரு வெயிட் இல்லை. தமிழ் சினிமாவோட கிராபிக்ஸ்சின் அடுத்த கட்டம்னு வேணும்னா சொல்லலாம். கிராபிக்ஸ ஒதுக்கி வெச்சுட்டு பார்த்தம்னா பெருசா ஒன்னும் இல்லை. நம்ம ரஹ்மான் குடுத்த வேலையா கம்மியாவும் போகாம எச்சாவும் போகாம கரெக்டா செஞ்சிருக்காரு. அயிசக்கா அழகா இருக்காங்கன்னு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்ல ஆனா அவங்க வயசு இப்போ முகத்துல தெரிய ஆரம்பிச்சிருச்சு.

பெரியவங்கள விட பொடுசுகளுக்கு இந்த படம் கண்டிப்பா அதிகமா புடிச்சு இருக்குங்கரதுல சந்தேகமே இல்ல. படத்துல ரத்தம் சொட்டுர வெட்டு குத்தோ, பி கிரேடு படத்துல வர்ற மாதிரியான காதல் காட்சிகளோ இல்ல, தைரியமா குடும்பத்தோட போயி காசு குடுத்து தியேட்டர்ல பார்க்க வேண்டிய படம் தான். என்ன சன் டிவி பண்ற ஓவர் பிரமோசன் என்ன மாறி நெறைய பேர கடுப்பு ஏத்தி இந்த படத்து மேல ஒரு ஈடுபாடு இல்லாம பண்ணிருச்சு. இது கண்டிப்பா சினிமாவ நல்லா கொண்டு போற வழி கெடயாது. 


சினிமா நாத்திகன்


பூஜை புனஸ்காரங்களை நம்பாதவன்
கடவுள் வழிபாட்டை நம்பாதவன்
கடுவுளை நம்பாதவன்
சாதா நாத்திகன்!

கட் அவுட் பாலாபிசேகங்களை நம்பாதவன்
குத்து வசனங்களை நம்பாதவன்
மேக்கப் போட்ட நடிகர்களை நம்பாதவன்
சினிமா நாத்திகன்!

கடவுள் இருக்கிறார் என்றான்
தூண் துரும்பு அனைத்திலும் கடவுள் என்றான்
கடவுள் உனக்குள் இருக்கிறார் என்றான்
இப்போது நான் தான் கடவுள் என்கிறான்!

படம் நூறு நாட்கள் ஓடும் என்றான்
இது தானாய் சேர்ந்த கூட்டம் என்றான்
இப்போது எனக்காக உயிரை கொடுக்க
ஒரு கூட்டம் இருக்கிறது என்கிறான்!

கூட்டம் போட்ட எல்லா சாமியார்களும்
சந்தோசமாய் இருக்க முடியாது
கூட்டம் சேர்த்த எல்லா நடிகனாலும்
ஆட்சியை பிடிக்க முடியாது!

ஆன்மீகமாக இருந்தாலும் சரி
சினிமாவாக இருந்தாலும் சரி
வீணாய் போவது நம் பணம் தான்
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!

இதுதான் காதலா?

தெரியாமல் காலை மிதித்ததற்கு 
தேடி வந்து  மன்னிப்பு கேட்டால் ஒருத்தி
கண்டதும் பொங்கியது காதல் எனக்கு!

கண் பார்வை இல்லாத ஒருவருக்கு
சாலையை கடக்க உதவினால் ஒருத்தி
கண்டதும் பொங்கியது காதல் எனக்கு!

கூட்டத்தில் அழுத யாரோ குழந்தையை
அள்ளி எடுத்து நகைப்பூட்டினால் ஒருத்தி
கண்டதும் பொங்கியது காதல் எனக்கு!

ஜீன்ஸ்சும் டீசர்டுமாய் பெண்கள் கூட்டம்
நடுவே தாவணியில் தெரிந்தால் ஒருத்தி
கண்டதும் பொங்கியது காதல் எனக்கு!

கொட்டும் மழையில் ஊரே ஒதுங்கி நிற்க
கைகள் நனைத்து மழையை ரசித்தால் ஒருத்தி
கண்டதும் பொங்கியது காதல் எனக்கு!

கொஞ்சம் வித்யாசமாய் எந்த பெண்
கண்ணில் பட்டாலும் மனதில் பொங்குது காதல்
இதற்கு பெயர் தான் கண்டதும் காதலா?

இல்லையே நான் தங்கத் தமிழணாச்சே
உள்ளம் பார்த்தல்லவா காதல் வர வேண்டும்
சற்று உரக்க யோசித்து ஒரு முடிவு செய்தேன்

இனிமேல் முடிந்தவரை அதிகமாய்
தமிழ் திரைப்படங்கள் பார்க்க கூடாது
எவ்வளவு மலிவாய் வருகிறது காதல்! 

நண்பேன்டா...


நீயெல்லாம் உருப்படவே மாட்டடா
டீ ஆத்த கூட லாயக்கு இல்ல...
இது நம்ம கணக்கு வாத்தி!

உன்னெல்லாம் பெத்து வளத்ததுக்கு
ரெண்டு எரும மாட்ட வளத்திருக்கலாம்...
இது நம்ம அப்பா!

கவலை படாதடா நம்ம சச்சின் ரஜினியெல்லாம்
படிச்சு பட்டம் வாங்கியா சாதிச்சாங்க...
இது நம்ம நண்பன்!

கடைசில படிச்ச படிப்புக்கு வேலை கெடைக்கல
தெறமைக்கு தான் வேலை கெடைச்சது
இதுதான் நிதர்சன உண்மை!

இப்ப யோசிச்சு பாத்தா ஒன்னு புரியுது
உழைத்தால் மட்டுமே உயர முடியும்
படிப்பு வெறும் பக்க பலம் தான்!


எனக்கு மட்டும் தான் இப்படி தோணுதா?

என்ன தான் ஆபீஸ் முடியற டைம் ஏழு மணினாலும் எல்லா ஒட்டு போடற வேலையும் முடிச்சு வெள்ளகாரனக்கு வெளக்கம் சொல்லிட்டு வெளிய வந்து மணிய பாத்தம்னா கொறஞ்சது ஒம்போது ஆகியிருக்கும். எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை என்னைக்காவது ஒரு நாள் சாயங்கால வெளிச்சத்துல வீட்ட பாத்துரனும்கறது தான். சரி அத விடுங்க நம்ம நேரா விசயத்துக்கு வருவோம். ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வந்ததும் சித்த நேரம் டிவிய பாத்து நம்ம சித்தத்த தெளிய வெப்போம்னு ரிமோட்ட கைல எடுத்தோம்னா அப்ப தான் அந்த கேள்வி உதயம் ஆகும் "எனக்கு மட்டும் தான் இப்படி தோணுதா?".

நம்ம டிவி பாக்குற நேரமே ஒன்பது மணியில இருந்து பத்தர பதினோரு மணி வரைக்கும் தான். அப்படியே ஒவ்வொரு சேனலா மாத்துவோம் வாங்க... மொதல்ல நியூஸ் சேனல்...தமிழ்ல நமக்கு தெரிஞ்ச ஒரே நியூஸ் சேனல் சன் நியூஸ் தான் அதுல வெட்டு, குத்து, கொலை, உல்லூர் சண்டை, விபத்துன்னு ஒரே கலவரமா இருக்கும். முடியலைடா சாமி எதாவது காமெடி பார்க்கலாம்னு ஆதித்யா சேனல் பக்கம் போனா ஊஊன்னு வடிவேலு ஊளை உட்டுட்டு இருப்பாரு இல்லேன்னா நாராசமா விவேக் ஒரு மொக்கைய போட்டுட்டு இருப்பாரு அதுவும் போட்ட காமெடி சீனே திரும்ப திரும்ப ஓடிட்டு இருக்கும். சரி பாட்டாவது கேப்போம்னு சன் மியுசிக் போட்டோம்னா பத்து மணிக்கு அதுலயும் காமெடி தான் ஓடிட்டு இருக்கும்.

சன், விஜய், ஜெயான்னு எல்லா சேனல்லையும் நிஜம், நடந்தது என்ன, மர்மம், மண்ணாங்கட்டின்னு ஏதோ ஒரு பேர்ல இந்த வீட்ல பேய் இருக்கு, கள்ளக் காதல், கொலை, மரத்துல பால் வடியுது, சரக்கு போட்டு குறி சொல்லும் சாமியார்னு ஒரே கலீஜா இருக்கும். சரி இப்ப தான் டிஸ்கவரி சேனல் தமிழ்ல ஓடுதேன்னு அதுக்கு மாத்தும்னா அதுல 'நீங்க இந்த பாலை வனத்துல உயிர் பிழைக்கனும்னா எது கெடச்சாலும் சாப்பிடனும்.. இந்த பாம்ப அப்படியே பச்சையா சாப்பிடலாம்'னு ஒரு பாம்ப பச்சையா சப்டுவான். அத பாத்த வடிவேல் சொல்லறது தான் ஞாபகம் வரும் 'நாங்க ஏன்டா நடு ராத்திரில சுடுகாட்டுக்கு போகணும்?'.


இல்லேன்னா destroyed  in seconds அப்படின்னு ஒரு விமானம் வெடிக்கரதயோ, ஒரு ஆளு தலை குப்புற விழுந்து ரத்தம் கொட்ட்ரதயோ, ஒரு பெட்ரோல் கிடங்கு வெடிச்சு செதர்ரதயோ காட்டுவாங்க. பத்து மணிக்கு தான் இந்த பிரச்சினை ஒரு எட்டரை ஒம்போது மணிக்கு எதாவது உருபடிய போட்ரங்கலான்னு பாத்தா இல்லை. எல்லா சேனல்லையும் ஒன்னா பாட்டு போட்டி நடக்குது இல்லன்னா குத்தாட்ட போட்டி நடக்குது. அதுவும் சமீபத்துல நான் பார்குறப்போ நேத்து ராத்திரி எம்மான்னு ஒரு பய்யன் பாடிட்டு இருக்கான் அடுத்த சேனல்ல வாவ் உங்க ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி சூப்பரா ஒர்க்கவுட் ஆகுதுன்னு ஒரு நடுவர் ஆண்ட்டி சொல்லுது.


சரி அதுக்கும் முன்னாடி டிவில வேற என்ன ஓடுதுன்னா சீரியல். சில நாள் மதியம் சாப்பிட வீட்டுக்கு போவேன் அப்போ ஒரு சீரியல் ஓடிட்டு இருக்கும் அதே சீரியல அடுத்த மாசம் மத்யானம் பாத்தாலும் புரியும். காலைல பதினொரு மணியில இருந்து ராத்திரி பதினோரு மணி வரைக்கும் சீரியல் போடறாங்க எல்லா சீரியளோட மய்யக் கதையும் சொத்து தகராறு, மாமியார் மருமக சண்டை, கள்ளக் காதல், பழிக்குப் பழின்னு செம்ம சீரியஸ்சா போயிட்டு இருக்கும். அதுவும் இடி இடிக்கற மாறி ஒரு மியூசிக் டமார் டமார்னு ஒரு மியூசிக்குன்னு ஒரே கொடூர சத்தங்களா இருக்கும். அத பாக்குரவங்களுக்கு கண்டிப்பா ரத்த கொதிப்பு வந்துடும். அட கார்டூன் சேனலாவது பார்க்கலாம்னா அதுலயும் சண்டை காட்சிகள் நிறைந்த முற்றிலும் மாறுபட்ட ஒன்ன ஓட்டிட்டு இருகாங்க இதுக்கு சீரியலே தேவல. நீயா நானான்னு ஒரே ஒரு நல்ல ப்ரோக்ராம் இருந்துச்சு அதுவும் வர வர மொக்கை ஆகுது.

எப்பவுமே நாம தூங்க போகும்போது மனசு லேசா இருக்கணும் அப்ப தான் தூங்கி எந்திரிக்கும் போது மனசுல புத்துணர்ச்சி பொங்கும் அன்னைக்கு பொழுதும் நல்ல படியா போகும். மனசுல ஏகப்பட்ட விசயத்த போட்டு ஓலப்பீட்டு தூங்க போனா கெட்ட கெட்ட கனவா வரும், நிம்மதியா தூங்க முடியாது, அப்படியே நாம தூங்கி எந்திரிச்சாலும் மனசு பாரமா இருக்கும் நமக்கே தெரியாம ஒரு பய உணர்ச்சி மனசுல இருந்துட்டே இருக்கும். அதனால தூங்க போரக்கு முன்னாடி தயவு செஞ்சு இந்த வெட்டி டிவி-கல பாக்காம போயி தூங்குங்க. முடிஞ்சா ஒரு நல்ல ஆக்க சக்திய என்னத்த குடுக்கற மாறி புத்தகம் எதாவது படிங்க இல்லன்ன வீட்ல குழந்தைகளோ வயசானவங்களோ 
இருந்தா அவங்க கிட்ட மனசு விட்டு பேசுங்க கண்டிப்பா உங்க மனசும் லேசாகும்.ஏன்டா ஒரு மனுஷன் டிவி பார்குறதே இருக்கற பிரச்சனைய மறந்து கொஞ்சம் பொழுத நல்ல படியா போக்குறதுக்கு தான். நீங்க போடற ப்ரோகிராம பாத்தா சந்தோசமா இருக்கரவன் கடுப்பு ஆகிடுவான், சும்மா இருக்கறவனுக்கு ரத்தம் கொதிக்க ஆரம்பிச்சிடும். இந்த கொடுமைக்கு தான் டிவி பார்க்குறது விட்டுட்டு blog படிக்கவும் எழுதவும் ஆரம்பிச்சிட்டேன்! இப்ப சொல்லுங்க மக்களே "எனக்கு மட்டும் தான் இப்படி தோணுதா?".

தமிழை வளர்ப்பது எப்படி?

பேரன்பு கொண்ட தமிழ் மக்களே! இன்று ஆங்கிலேயன் போன பிறகும் அவன் மொழி நம் தாய் தமிழை அழித்துக் கொண்டிருகிறது. நாம் உடனே எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை பின்பற்றுவோம் இனிமேல் தமிழிலேயே பெயர்கள் வைப்போம், தமிழிலேயே எழுதுவோம், அந்நிய மொழிகளை தவிர்ப்போம். செம்மொழியான தமிழ் மொழியை இப் பூலோகம் முழுதும் பரப்புவோம்... பரப்பி? முடியலைடா சாமி....
நம்ம முக்கியமா புரிஞ்சிக்க வேண்டிய விஷயங்கள் மூணு:

1. மொழியோட முதல் பயன்பாடு பேச்சு
ஒரு மொழி முதன்மயாவும் அதிகமாவும் எங்க உபயோக படுதுன்னு பாத்தீங்கண்ணா பேசரக்கு தான். நீங்க செந்தமிழ்ல பதிவு எழுதரனாலையோ இல்ல தொல்காப்பியம், சீவக சிந்தாமணி, புறநானூறுன்னு படிகறதுனலையோ மட்டும் தமிழ் வளந்துரபோறது இல்லை. நீங்க யார் கிட்ட பேசுனாலும் அவங்களுக்கும் தமிழ் தெரிஞ்சா, அவங்க கூட தமிழ்ல பேசுனாலே உங்களுக்கு புண்ணியமா போகும்.


எந்த மொழியா இருந்தாலும் அது பேச பேச தான் வளரும். எழுத்து உருவே இல்லாத மொழிகள் எவ்வளவோ இருக்கு ஆனா பேச்சு வழக்குல இல்லாம வெறும் எழுத்தா மட்டும் இருக்குற மொழிகள் ரொம்ப கம்மி. பேசப்படும் மொழி மனிதன் இருக்கற வரைக்கும் வளரும் ஆனா வெறும் எழுத்து உரு மட்டும் இருக்கற மொழி ரொம்ப நாள் தாங்காது. 


முடிஞ்ச வரைக்கும் தமிழன் அவனுக்கு தெரிஞ்ச கோயம்புத்தூர் தமிழோ, நெல்லை தமிழோ, சென்னை தமிழோ, மதுரை தமிழோ, தஞ்சை தமிழோ இல்லை ஈழ தமிழோ எதோ ஒரு தமிழ்ல பேசுனாலே தமிழ் வளரும். பிற மொழி கலப்பு இல்லாம தமிழ் பேசுறது சிரமம் தான் ஏன்னா நம்ம உபயோக படுத்துற கரண்ட், கம்ப்யூட்டர், இன்டர்நெட், ஈமெயில், கார், பைக், செல் போன், பேன், லைட்டு இது எதுக்குமே மூலம் தமிழோ தமிழனோ இல்லை. அதனால பிற நாட்டு காரன் கண்டு புடிப்போட பேர தமிழ்ல மொழி பெயர்குற வேலைய விட்டுட்டு, ஒழுங்கா மம்மி டாடிக்கு பதிலா அம்மா அப்பான்னு கூபிட்டாலே போதும்.


2. பொது ஜனத்துக்கு புடிச்சது புதுமையே
அந்த காலத்துல கவிதை கதை இதெல்லாம் தமிழ் தெரிஞ்சா மட்டும் படிச்ச்சிட முடியாது ஏன்னா  எல்லாமே வெண்பா செய்யுள் வடிவுல இருக்கும் பொது ஜனத்துக்கு புரியாது. உங்களுக்கு புரியற மாறி சொல்லணும்னா உங்களால அஞ்சாவதோ ஆறாவதோ படிக்கும் போது தமிழ் புத்தகத்துல இருக்கற செய்யுள், திருக்குறள், புறநானூறு இதெல்லாம் படிச்சா புரியாது (இப்பவும் புரியாதுங்கறது வேற விஷயம்) தமிழ் வாத்தி ஒவ்வொரு வரியா படிச்சு வெளக்கம் சொன்ன தான் புரியும். ஏனா அத நீங்க படிக்கும் போது தமிழ்னு தெரியும் ஆனா புரியாது அதுக்கு கொஞ்சம் புலமை வேணும். அதனாலேயே நெறைய பேருக்கு எப்படி கணக்கு பாடம் புடிக்காதோ அதே மாறி மனப்பாட செய்யுளும் புடிக்காது.  


இந்த அளவுக்கு கல்வி அறிவு தொழில் நுட்பமெல்லாம் இல்லாத அந்த காலத்துல பாரதியார் ஒன்னு பண்ணினாரு, அதாவது ரொம்ப சுலபமான வார்த்தைகள்ல கவிதை எழுதினாரு தமிழ் படிக்க தெரிஞ்ச ஒரு சராசரி தமிழனுக்கும் புரியற வகைல அவரோட கவிதைகள் இருந்துச்சு. அவர் கையாண்ட அந்த முறை தான் "புது கவிதை" பின்னாடி பாரதி தாசன்ல இருந்து இன்னைக்கு சினிமாக்கு பாட்டு எழுதறவங்க வரைக்கும் அந்த எளிய புதிய முறைய தான் கையாள்றாங்க.


ஒரு முக்கியமான விசயத்த நீங்க கவனிசிருந்தா புரியும் தமிழ பத்தி எந்த ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சி நடந்தாலும் இல்ல வெளியில எந்த நிகழ்ச்சி நடந்தாலும் நம்ம செம்மொழி மாநாடு உட்பட, அந்த மேடை வடிவமைப்பு அலங்காரங்கள் எல்லாமே நம்ம பழைய நாகரிகத்தையும் புராணங்களையும் குரிக்கற மாறி தான் இருக்கும். தெளிவா சொல்லணும்னா தமிழ்னாலே ஒரு பழமையான தொன்மையனங்கர என்னத்த தான் வரவழைக்கும். பேசுறவங்க கூட ஒரு இயல்பா தினசரி வாழ்க்கைல பேசற மாறி பேச மாட்டாங்க ஏதோ எதிர் கட்சி காரண செந்தமிழ்ல  சண்டைக்கு இழுக்கற தொனியிலேய பேசுவாங்க. குறிப்பா இந்த பேச்சு குழந்தைகளுக்கோ இளைய தலை முரயினருக்கோ சுத்தமா புடிக்காது. தமிழ் உண்மையா வளரனும்னா பழங்கதைகள் பேசாம புதுமையா எதாவது பேசணும். தமிழ் சார்ந்த நிகழ்சிகள் பழமையானங்கர எண்ணம் நீக்கப்பட்டு தமிழ் இன்னும் இளமையானதுங்கர என்னத்த வரவழைக்கணும் குறிப்பா குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் புடிக்கற மாறி புதுமையா இருக்கணும். "மாறாதது மாற்றம் மட்டுமே"ன்னு சொல்லுவாங்க இந்த உலகத்துல எது புதுமைகள தனக்குள்ள ஏத்துகிட்டு பரிமானம் அடையுதோ அது மட்டும் தான் பிழைக்கும், இது மொழிக்கும் பொருந்தும்.


3. எளிமையே வலிமை
'எளிமையே வலிமை' இது மனிதனுக்கு மட்டும் அல்ல மொழிக்கும் தான். அறிவியல் ரீதியாக எந்த மொழி மிக எளிய சப்தங்களை (pronunciation) கொண்டு இருக்குதோ அத யார் வேணும்னாலும் சீக்கிரம் கத்துக்க முடியும் நம்ம தமிழ் அப்படி பட்ட மொழி தான் எளிமையான அதே சமயம் இனிமையான மொழி. அப்புறம் என்ன பிரச்சினைன்னு கேக்கரீங்களா... சொல்றேன். நம்மாளுக தமிழ்ல பேசறேன்னு சொல்லிட்டு பண்ற அலும்பு தாங்க முடியாது. 


தோழரே காலை உணவு அருந்தி விட்டீர்களா? உங்கள் மடிக் கணினியில் இனைய தள தொடர்பு வேலை செய்கின்றதா?


நண்பா சாபுட்டியா? உன்னோட லேப்டாப்ல நெட் வேலை செய்யுதா?


இந்த ரெண்டுல எது உங்களுக்கு எளிமைய இருக்கு? செந்தமிழ்ல பேசுனா தான் தமிழ் பேசுறதா அர்த்தமா? லேப்டாப்பும் இன்டர்நெட்டும் நம்ம கண்டு புடிக்கல அது கண்டு புடிச்சவன் வெச்ச பேரு அத எதுக்கு மொழி பெயர்த்து சொல்லணும்? இப்போ உங்க பேரு சாமியப்பன்னு வெச்சுகுங்க நீங்க அமெரிக்கா போனீங்கன்னா உங்கள சாமியப்பன்னு கூப்டுவாங்களா இல்ல Godfather-னு கூப்டுவாங்களா? நான் சொல்ல வர்றது இது தான் தமிழ வளர்கனும்னா நடைமுறை தமிழ்ல பேசுனா போதும் செந்தமிழ்ல பேசணும்ங்கர கட்டாயம் இல்ல அதே மாறி அடுத்தவன் கண்டுபுடிப்புகளுக்கு தமிழ்ல பேர மொழி பெயர்க்க வேண்டிய அவசியமும் இல்ல. ரொம்ப கஷ்ட படமா முடிஞ்ச வரைக்கும் தமிழ்ல பேசுனாலே போதும். 


அவ்வளவு தான் மக்களே!


இவ்வளவு நீளமா இருக்கற பதிவ படிக்கவே மொடயா இருக்குது நான் எங்க போயி தமிழ வளக்கறது...ஆனா எதாவது பண்ணி நாமளும் தமிழ வளக்கனும்னு நினைகரீங்களா? அப்ப ஒன்னு பண்ணுங்க உங்க குழந்தைக்கு தமிழ்னு பேரு வச்சு வளங்க... நானும் தமிழ வளர்த்தேன்னு நாளைக்கு நீங்க சொல்லிக்கலாம்!


குறிப்பு: ரொம்ப நீளமா எழுதிட்டேன்னு நெனைக்கிறேன் அடுத்த பதிவ முடிஞ்ச வரைக்கும் சுருக்கமா சொல்ல பாக்குறேன். அப்புறம் முடிஞ்ச வரைக்கும் எழுத்துப் பிழைகல சரி செஞ்சிருக்கேன் எதாவது கண்ணுல பட்டா கண்டுகாதீங்க :)

மனம் ஒரு குரங்கு

காலை கண் விழித்ததும்
தலை வலி மண்டையை பிளந்தது
கண்கள் இரண்டும் தீ போல் எரிந்தது
வயிறு எரிந்து காதில் புகை வந்தது
ஸ்ஸப்பா இனிமேல் தொடக் கூடாது
தீர்மானமாய் முடிவு செய்தேன்.

மாலை வந்தது மந்தாரம் தெளிந்தது
ஆருயிர் நண்பன் அலை பேசியில்
"மச்சி சரக்கு அடிக்கலாம் வர்றியா?"


கண்டவுடன் காதல்?


கண்ணை பார்த்ததும்
காதல் வருமா?
பெண்ணை பார்த்தவுடன்
கண் எங்கே தெரிகிறது?


சர்பத் - ஓர்அறிமுகம்பெயர்க் காரணம் 
இது ஒன்னும் ஏழு மாசமா யோசிச்சு வச்ச பேரு இல்ல, வேற பேரே கெடைக்காம வெச்சது. நானும் ஏகப்பட்ட பேரு முயற்சி பண்ணி பாத்து ஒண்ணுமே கெடைக்காம வெச்ச பேரு தான் சர்பத்! அடங்கொக்கமக்கா எனக்கு புடிச்ச எல்லா பேரையும் பதிவு பண்ணிட்டாங்க ஆனா ஒருத்தனும் அதுல பதிவே போடறது இல்ல... சரி அவன் அவன் பிரச்சினை அவன் அவனுக்கு. 

பதிவு எழுதலாம்னு முடிவு பண்ணினதுக்கு அப்புறம் பெரும் பிரச்சினையே இந்த பேரு முடிவு பண்றது தான். நமக்கு புடிச்ச பேருல யாராவது ஏற்கனவே எழுதிட்டு இருகாங்க அப்படி இல்லன பதிவு மட்டும் பண்ணி வெச்சுட்டு பொழப்ப பாக்க போயர்றாங்க. ஒரு நல்ல எளிமையான சுருக்கமான பேரு வைக்கனும்னு முடிவு பண்ணப்ப தான் இந்த "சர்பத்" டக்குனு ஞாபகம் வந்துச்சு. ஒரு டம்ளர் தண்ணி, 2 கரண்டி சர்க்கரை, பாதி எழுமிச்சம்பழம் யாரு வேணும்ன்னாலும் சுலபமா சர்பத் போற்றலாம் பெரிய வித்தையே இல்ல. நான் பதிவு எழுதலாம்னு முடிவு பண்ணினதும் அந்த மாறி தான் சுலபமான உள்ளூர் தமிழ்ல எளிமையா எனக்கு தெரிஞ்சதையும் தெரிஞ்சிக்கிட்டத்தையும் எழுதனும்னு நெனச்சேன், அது தான் இந்த சர்பத்!

நான் யார்?
என்னை பொறுத்த வரைக்கும் எழுத்துக்கு முகமோ பெயரோ தேவை இல்லை. நம்ம வானொலி கேக்கறோம் பேசறவங்க குரல் நல்லா இருக்கு, அவங்க பேர சொன்ன தெரிஞ்சிக்கறோம் இல்லேன்னா குரலை ரசிச்சிட்டு அடுத்து வர்ற பாட்ட கேட்டுட்டு போயர்றோம் 99 % வானொலி தொகுப்பாளர்களோட முகம் மக்களுக்கு தெரியறதே இல்ல குரல் நல்லா இருந்தா ரசிக்கிறோம் அவ்ளோதான். 

சில சமயத்துல நம்ம பெயரும் முகமும் நம்ம படைப்புகளுக்கு ஒரு அடையாளம் கொடுத்துருது. எப்பவுமே ஒரு படைப்புதான் என்ன பொறுத்த வரைக்கும் படைப்பாளிக்கு அடையாளம் கொடுக்கணும்.

சரி நான் யாரா இருந்தா என்ன கண்ணு... கருத்து மனசுக்கு புடிச்சிருந்த கவ்வீட்டு போக வேண்டியது தான...

பதிவெழுத காரணம்?
எல்லா மனுசனுக்கும் ஒரு வலைப்பக்கம் தொடங்கனும்னு ஆசை இருக்கும் அதுவும் குறிப்பா இனைய தளம் சார்ந்த வேலைல இருக்கறவங்களுக்கும், தினமும் இனைய தளத்தை உபயோகிகரவங்களுக்கும் கண்டிப்பா இருக்கும். ரொம்ப நாளா, சொல்லபோனா ரொம்ப வருசமா ஆரம்பிக்கணும்னு நெனச்சு இப்ப தான் முயற்சி கைகூடி இருக்கு. 

நல்லவன் ஆகுறது கஷ்டம் இல்ல ஆனா நல்லவனாவே இருக்கறது தான் கஷ்டம். பதிவு எழுதலாம்னு முடிவு பண்றது கஷ்டமா இல்ல ஆனா தொடர்ந்து எழுதறது தான் கஷ்டம், அட மறந்துட்டேன் பாருங்க நல்ல பேரு வைக்கறது ரெம்ப ரெம்ப கஷ்டம்!!

தொடர்ந்து எழுதுவேன்னு நெனைக்கிறேன் பார்போம் விடா முயற்சி விஸ்வரூப வெற்றி!

இனிய தொடக்கம்: பத்து பொருத்தங்களுடன்!


"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்அதாவது அய்யன் வள்ளுவர் சிம்பிளா என்ன சொல்றாருன்னா ஓவர் பேச்சு ஒடம்புக்கு ஆகாது!


பத்தாம் தேதி, பத்தாவது மாசம், பத்தாவது வருஷம், பத்து மணி, பத்து நிமிசத்துக்கு இந்த வலை பக்கத்த (blog) ஆரம்பிக்கிறேன்... எப்படி நம்ம பத்து பொருத்தம்?

பிட்டுக்காக படம் பாக்குறவங்க ஒரு ரகம், கதைக்காக படம் பாக்குறவங்க ஒரு ரகம்.... அதே மாறி ஹிட்டுக்காக எழுதுறவங்க ஒரு ரகம், மனசு திருப்திக்காக எழுதறவங்க ஒரு ரகம்.... நான் ரெண்டுலயுமே ரெண்டாவது ரகம் :)

அடங்கொன்னியா... இவன் என்ன ஆரம்பத்துலையே குத்து வசனம் (punch dialogue) பேசுறானேன்னு நெனச்சுக்காதீங்க!

எப்படியோ உங்க வருகைக்கு நன்றி மீண்டும் வருக
Related Posts Plugin for WordPress, Blogger...