தமிழை மட்டுமே நம்பி ஒருவர் வாழ முடியுமா?

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த என் பல நண்பர்களுக்கு தமிழ் சரளமாக படிக்கவும் எழுதவும் தெரியாது ஆனால் இது அவர்களது அன்றாட வாழ்கையை இம்மி அளவும் பாதித்ததாக தெரியவில்லை. நம் அனைவர் மனதிலும் உள்ள ஒரு பொதுவான கருத்து, தமிழில் பல இலக்கிய படைப்புகள் இருக்கின்றன என்பதற்கு மேலாக என்ன இருக்கிறது? தமிழ் கற்றால் பேசினால் இன்றைய நவீன யுகத்தில் கிடைக்கும் அனுகூலங்கள் என்ன? தமிழை ஒரு மொழியாக அதை விட ஒரு தன்மான உணர்வாக பார்க்கிறோமே தவிர, தமிழ் சார்ந்த தொழில் என்று எதாவது ஒன்று இந்த உலகமயமாக்கல் புயலை தாங்கி நிற்கிறதா? நமது விடை இல்லை அல்லது தெரியாது என்பதாக இருக்கும். விதன்டா வாதத்திற்கு வேண்டுமானால் யாராவது விளக்கம் சொல்ல முயற்சிக்கலாம். 

சமீபத்தில் நான் பார்த்த சில தொலைக்காட்சி நிகழ்சிகளும் உரையாடல்களும் நம் தாய் மொழி தமிழ் மீது பல எண்ண மாற்றங்களை விட்டுச் சென்றிருக்கின்றன. தமிழை காக்க தமிழ் வழிக்கல்வி அவசியம் என்று பலர் சொல்கிறார்கள். தமிழ் வழிக்கல்வி என்பது எந்த அளவிற்கு சாத்தியம்? இன்றைய தமிழ் வழிக்கல்வி முறையில் என்ன நடக்கிறது? Maths என்பதை கணிதம் என்றும், Physics என்பதை இயற்பியல் என்றும், Chemistry என்பதை வேதியல் என்றும் மொழிபெயர்த்து கற்பிக்கிறார்கள், அதுவும் அரைகுறையாக. மேலோட்டமாக மொழி பெயர்க்க முடிகிறதே தவிர பாடத்தின் மூலத்தை மொழிபெயர்க்க முடிகிறதா? முடிவதில்லை. 

அது என்ன பாடத்தின் மூலத்தை மொழி பெயர்ப்பது? என்னதான் computer என்பதை கணிப்பொறி என்று சொல்லிக்கொடுத்தாலும், command என்பதை கட்டளை என்று மொழிபெயர்த்தாலும் அதை கம்ப்யூட்டரில் பிரகயோகிக்க முடியாது, செயல்முறையில் நீங்கள் ஆங்கிலம் தான் உபயோகப்படுத்தியாக வேண்டும். அதே போல் physics equation-யோ  chemistry equation -யோ தமிழில் எப்படி மொழிபெயர்க்க முடியும்? உதாரணத்திற்கு H2O என்பதை தமிழில் எப்படி மொழி பெயர்க்க முடியும்?

தமிழ் உன்னதமான மொழி, உயர்வான மொழி, இனிமையான மொழி, உயர் தனி செம்மொழி மறுப்பதற்கில்லை. பிறகு ஏன் ஆங்கிலத்தையும் பிற மொழிகளையும் நம் மக்கள் நாடி செல்கிறார்கள்? காரணம் தொழிற்கல்வி தமிழ் முறையில் குறைவு அப்படியே இருந்தாலும் தமிழ்நாட்டை தாண்டி வேலை வாய்ப்புகள் குறைவு. ஆங்கில வழி தொழிற்கல்விகள் வாங்கித்தரும் வேலை வாய்ப்புகளையும், சம்பளத்தையும் தமிழ் வழி தொழிற்கல்வி பலருக்கு வாங்கித்தருவதில்லை.

ஒரு மொழி, தன்மான உணர்வு என்பதை காட்டிலும் தமிழின் அவசியம் இன்றைய தலைமுறையினருக்கு என்ன? இதை இதையெல்லாம் செய்தால்தான் தமிழ் வளரும் என்றால் தமிழ் என்றோ அழிந்திருக்கும், தமிழ் ஒரு அழியா மொழி. தமிழில் உள்ள குறைகளை சொன்னால் உடனே நீங்கள் தமிழின துரோகி ஆகி விடுவீர்கள். வெளி நாடுகளில் வேலை செய்தாலோ, பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்கு சென்றாலோ தமிழனுக்கு அடிமை புத்தி என்பார்கள். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று அன்றே சொன்னவன் தமிழன்.  உலகமயமாக்கல் என்பதை இவ்வுலகம் அறிவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கடல் தாண்டி வணிகம் செய்தவன் தமிழன்.

எனது கருத்து, பல நூற்றாண்டுகளாக பலரால் வளர்ந்த தமிழ் ஒரு காலகட்டத்தில் திராவிட கட்சிகள் கையில் சிக்கி, தமிழை ஏதோ அவர்கள் மட்டுமே வளர்க தகுதி பெற்றவர்கள் என்பது போன்ற ஒரு மாயையை உருவாகி விட்டது. ஆங்கில மோகம் கூடாது ஹிந்தி எதிர்ப்பு என்று ஏதோதோ கூறி தமிழனை தமிழ்நாட்டிர்க்குள்ளாகவே முடக்கி விட்டார்கள். தமிழ் வாழவைக்கும் என்று சொல்கிறார்களே தவிர, நான் தமிழால் முன்னுக்கு வந்தவன், தமிழால் என் தொழில் சிறந்தது, தமிழ் மட்டுமே என்னை வாழ வைக்கிறது என்று யார் சொல்லியும் நாம் கேள்வி படுவதில்லை.

இந்த பதிவை கூட நான் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய அது தான் unicode தமிழாக மாறுகிறது. ஒரு மொழி, மொழி என்பதையும் தாண்டி பரவ வேண்டும், அனைவராலும் விரும்பப்பட வேண்டும் என்றால் இன்றைய காலச் சூழலுக்கு அது தொழில் நுட்பத்தாலும் விஞ்ஞானத்தாலும் மட்டுமே முடியும். தமிழ் சார்ந்த கண்டுபிடிப்புகள் வர வேண்டும் உதாரணமாக தமிழில் மட்டுமே இயங்கும் ஒரு கணினியும் இயங்கு மென்பொருளும் (Operating system) உருவாக்கப்பட வேண்டும். 

தமிழ் கல்வி என்பது மொழி பெயர்கப்படாமல் அதன் மூலமே தமிழாய் இருக்க வேண்டும். தமிழ் என்பது வெறும் மொழி, பழைய இலக்கியம், அரசியல் என்பதை தாண்டி தொழில் நுட்பத்தின் அவசியமாக அறியப்படும்போது, பிற நாடுகளில் தமிழ் கற்பிக்கப்பட்டு அவர்கள் தங்கள் மொழி அழிகிறது என்று கூறும் நிலமை வரலாம். இப்படி ஒரு நிலமை வந்தால் நாம் யாரையும் சென்று தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அதெல்லாம் முடியாது தமிழ் என்பது மொழி அது எப்படி தொழில்நுட்பமாக முடியும் என்று எண்ணினால் ஆங்கில வழி தொழிற்கல்வி கற்பதையோ தமிழை புறக்கணிப்பதையோ தவிர்க்க முடியாது. 

அவள்...


சிரைக்கப்படாத புருவங்கள்
நறுக்கப் படாத கார் கூந்தல்

மெழுகு தோய்க்காத பருக்கள்
சாயம் பூசாத ஈர உதடுகள் 

இதம் பேணும் இனிய விரல் 
கொஞ்சு தமிழ் பேசும் குரல்

நான் பார்க்கும் பெண்களெல்லாம் 
வேற்று கிரக வாசிபோல் திரிய 

நான் தேடும் நிஜப் பெண்ணே
எங்கிருக்கிறாய் நீ?உலகம்: இவ்வளவு சிறியதா?

நாம் அனைவரும் இயற்கையை மறந்து வெகு நாட்கள் ஆகி விட்டது. இந்த உலகம் அதில் வாழும் மனிதர்கள், மிருகங்கள், மலைகள், கடல், எரிமலைகள் அனைத்தும் இயற்கைக்குள் அடக்கம். மனிதர்களாகிய நாம் காடுகளை அழித்து நகரங்களை உருவாக்கினோம். தொழிற்சாலைகளையும் வாகனங்களையும் பெருக்கி காற்றையும் நீரையும் மாசு படுத்தினோம்.

காலம் தவறி மழை பெய்கிறது, அளவுக்கு மீறி வெயில் அடிக்கிறது, பருவ நிலை மாற்றம், குளோபல் வார்மிங் என்று ஏதோதோ சொல்கிறோம். மரங்களை வளர்ப்போம், மாசுக்களை குறைப்போம், இயற்கையை காப்போம் என்று கிளம்பிவிட்டோம் ஒன்றை மறந்து விட்டோம். இயற்கையை நாம் காப்பதில்லை இயற்கை தான் நம்மை காத்துக்கொண்டிருக்கிறது.

சற்று யோசித்து பாருங்கள் கோடை வெய்யிலுக்கு மின் விசிறி, குளிர் சாதன பெட்டி, இளநீர், சர்பத் என்று சூட்டை தணிக்க பல விசயங்களை செய்கிறோம். ஆனால் இயற்கை நினைத்தால் மதிய மொட்டை வெயிலை கூட ஐந்தே நிமிடங்களில் மழை பொழிவின் மூலம் குளிர வைத்து விடும். மனிதன் ஏற்படுத்திய அனைத்து மாசுக்களையும் இயற்கை நினைத்தால் குறுகிய காலத்திற்குள் அகற்ற முடியும். இயற்கையின் சக்தி மனிதனின் அறிவுக்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்டது.

நாம் வாழும் இந்த உலகம் இயற்கையின் ஒரு சிறிய துகள் மட்டுமே. நாம் மைக்ரோஸ்கோப்பின் வழியே மட்டுமே காண முடியும் நுன்னுயிர் எவ்வளவு சிறியதோ, அதை விட இயற்கையின் முன் பன்மடங்கு சிறியது நாம் வாழும் இந்த பூமி. கீழே உள்ள படத்தில் படம்[1] சூரியன், பூமி, வியாழன் மற்றும் சில கிரகங்களை ஒப்பிட்டு காட்டுகிறது அதில் ஒரு சிறிய புள்ளி போல் தெரிகிறது பூமி. படம்[2] பால்வெளியை காட்டுகிறது அதில் ஒரு சிறிய புள்ளி போல் தெரிகிறது சூரியன், அதில் பூமி தெரிவது கடினம் துகளோடு துகளாக போயிருக்கும்.

இந்த இரண்டு வீடியோக்களையும் முழுமையாக பாருங்கள் உண்மையில் நாம் வாழும் உலகம் எவ்வளவு சிறியதென்று உங்களுக்கு தெளிவாய் புரியும்.
நீங்கள் பார்த்த இந்த விடியோக்கள் மனித அறிவிற்கு தெரிந்த அளவுதான், இயற்கை இதையும் தாண்டி அளப்பரிய சக்தி வாய்ந்தது, கணக்கில் அடங்காதது. மனிதன் தன் அறிவுக்கு அப்பாற்பட்ட சக்தியை கடவுள் என்றான், என்னை பொறுத்த வரை அந்த சக்தி இயற்கை. நாம் ஒப்புகொண்டாலும் மறுத்தாலும் நம் வாழ்வின் அன்றாட செயல்பாடுகளும்,  நிகழ்வுகளும் நம் அறிவுக்கு அப்பாற்பட்ட சக்தியின் கட்டுப்பாட்டில் தான் நடக்கின்றது.

அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவான இந்த பூமியை மனிதன் ஆள்கிறான். விஞ்ஞானத்தின் மூலம் இயற்கையை வென்று விட துடிக்கிறான். சிட்டுக்குருவிகளை செல்போன் டவர் வைத்து சிதைக்கிறான், விலங்குகளின் வாழ்வாதரமான காடுகளுக்குள் குடிபுகுந்து, யானைகளையும், சிறுத்தைகளையும் குறை கூறுகிறான். தனக்கு சொந்தம் இல்லாத இந்த பூமியை கூறு போட்டு விற்கிறான். இன்னும் ஒரு படி மேலே போய் நிலவிலும், மற்ற கிரகங்களிலும் கூட இடத்தை விற்க ஆரம்பித்து விட்டான்: Moon Estates.

மனிதர்களுக்குள் எவ்வளவு போட்டிகள், பொறாமைகள், சண்டை சச்சரவுகள். எதற்காக பிறந்தோம், எதற்காக வாழ்கிறோம், எதை நோக்கி செல்கிறோம் என்றே தெரியாமல் பல சந்ததிகள் வந்து சென்றாகிவிட்டது. இவ்வுலகம் மிகச்சிறியது நாம் வாழும் இவ்வாழ்க்கை மிக மிக சிறியது. முடிந்த வரை இயற்கைய நேசிப்போம், மற்ற ஜீவராசிகளையும் நேசிப்போம் அதற்கு முன் நம் சக மனித்ர்களை நேசிப்போம்!

அப்பன் காசு

நான்கு வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம், என்னிடம் அப்போது பைக் இல்லை கல்லூரிக்கு பேருந்தில் தான் சென்று கொண்டிருந்தேன். பேருந்தில் இருந்து இறங்கி கல்லூரிக்கு அரை கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். அப்படி நடந்து செல்லும்போது என் சக வயது மாணவர்கள் பல்சர்களிலும், கரிஸ்மாக்களிலும் சீறிக்கொண்டு செல்லும் போது மனதுக்குள் தோன்றும் "ம்ம்ம்ம்...அப்பன் காசு என்னமா சீன் போட்ராணுக".

சனிக்கிழமைகளில் நண்பர்கள் புடைசூழ சினிமாவிற்கு செல்வது வழக்கம். நாங்கள் ஆறு பேர் எங்கு சென்றாலும் எப்போதும் ஒன்றாக செல்வோம், அதனால் மூன்று பைக் வேண்டும். ஆறு பேரில் இரண்டு பேரிடம்தான் பைக் இருக்கும் எனவே மூன்றாவது பைக்கை ஏற்பாடு செய்வதில் தான் எப்போதும் சிக்கல். அப்பா வீட்டில் இருந்தால் கெஞ்சி கூத்தாடி அவரது பைக்கை வாங்கி செல்வேன் இல்லையென்றால் பைக் வைத்திருக்கும் நண்பர்களிடம் ஓசி வாங்க வேண்டும். எப்படியோ மூன்றாவது பைக்கை ஏற்பாடு செய்து ஆறு பேரும் கிளம்பினோம், வழியில் எங்களை பார்த்த ஒரு மொக்கை நண்பன் தானும் வருவதாக அடம் பிடிக்க வேறு வழி இல்லாமல் ஒரு பைக்கில் ட்டிரிப்பில்ஸ் அடித்தோம். போலீஸ் கண்ணில் சிக்காமல் செல்ல வேண்டும் என்பதற்காக பஸ்சுக்கு பின்னாலும் லாரிக்கு பின்னாலும் ஒதுங்கி ஒதுங்கி சென்றோம்.


டிராபிக் அதிகமாய் இருந்தது, போதாதென்று மழை வேறு மெலிதாய் தூர ஆரம்பித்தது கொஞ்சம் வேகமாய் செல்ல எத்தனித்த போது சரியாக சிக்னல் விழுந்தது. டிராபிக் நெரிசல், சிக்னல், தூறும் மழை, பைக்கில் ட்டிரிப்பில்ஸ், தூரத்தில் நின்றிருக்கும் போலீஸ்காரர் அனைத்தும் சேர்ந்து எரிச்சலை கொஞ்சம் கொஞ்சமாய் தூண்டிக்கொண்டிருக்க சர்ர்ர்ரர்ரென்று ஒரு கார் வந்து நின்றது. உள்ளே என் வயதோ இல்லை என்னைவிட இரண்டு மூன்று வயதோ கூட இருக்கும் ஒரு இளைஞன், கார் கண்ணாடி பாதி இறங்கியிருக்க சில் சில் என்று தெறிக்கும் அளவுக்கு பாட்டு சத்தம் வெளியில் கேட்டுக்கொண்டிருந்தது. மூன்று பைக்கில் ஏழு பேர் அவதி பட்டுக் கொண்டிருக்க ஒற்றையாய் காரில் அவன். என் பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த நண்பன் சொன்னான் "அப்பன் காசு மச்சி, என்னம்மா சீன் போட்ராணுக பாருடா".

அப்போது தான் மெலிதாய் இருந்த அந்த எண்ணம் வலுத்தது, சொந்தமாய் ஒரு வண்டி இல்லாமல் எவ்வளவு கஷ்டம்... படித்து முடித்து வேலைக்கு சென்று சம்பாதிக்க ஆரம்பித்ததும் ஒரு பைக்கோ காரோ வாங்க வேண்டும். ஆறேழு மாதங்கள் உருண்டன, கடைசி வருட தேர்வுகள் முடிந்தது அடித்து பிடித்து ஒரு நல்ல பன்னாட்டு நிறுவனத்தில் ஐந்திலக்க சம்பளத்தில் வேலையும் கிடைத்தது. பெரிய பைக் வாங்க நினைத்தாலும் அப்பாவின் உடன்பாடு இல்லாத காரணத்தால் ஸ்பிளென்டர் வாங்கினேன். மீண்டும் வருடங்கள் உருண்டன, ஒரு பெரிய பைக் வாங்கி விடுவது என்று முடிவு செய்தேன். நான் பைக் வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது நண்பன் ஒருவன் குழப்பினான் "டேய் நீ எழுபது எண்பதாயிரம் பைக்குக்கு செலவு பண்றதுக்கு பதிலா லோன் போட்டு கார் வாங்கிடு மச்சி. நல்ல யோசிச்சு பாரு இன்னும் ரெண்டு மூணு வருசத்துல்ல இன்கிரிமெண்டு புரமொசன்னு எப்படியும் உன்னோட சம்பளம் 50% அதிகம் ஆகிடும் அப்புறம் லோன் கட்றது ஒன்னும் பெரிய விஷயமா தெரியாது". அவன் சொன்னது கொஞ்சம் குழப்பினாலும் சரி தான் போலும் என்று தோன்றியது.


கார் என்று முடிவு செய்த பிறகு என்ன கார் வாங்குவது என்று தெரியவில்லை. கார் வைத்திருக்கும் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரிடமும் ஆலோசித்து பல கார் பற்றிய இணையதளங்களை அலசி ஆராய்ந்து, தட்டு தடுமாறி, குழம்பி பின்னர் தெளிவாய் இருப்பதாய் நானே நம்பி இந்த கார் வாங்குவது என்று முடிவு செய்தேன். பல பேருக்கு போன் செய்தால் "டேய் ராசா எத்தன தடவடா சொல்றது ஏதோ ஒரு காரை வாங்கித்தொளடா... உனக்கு வெளக்கம் சொல்லியே என் காரை பார்த்தா எனக்கே கடுப்பு ஆகுது. இப்பெல்லாம் பஸ்ல தான் போறேன் தெரியுமா" என்று நொந்து போகும் அளவுக்கு பல பேரை கேள்விகளால் துளைத்து எடுத்திருக்கிறேன். அடுத்து வாழ்கையில் முதன் முதலாக லோன் வாங்குகிறேன், அதையும் பல பேரிடம் விசாரித்து, சரி இந்த வங்கியில் கடன் வாங்குவது என்று முடிவு செய்தேன். பத்துப் பதினைந்து நாள் அலைந்து லோள் பட்டு லோன் வாங்கி கார் டீலரையும் ஒரு வழியாக்கி கடைசியில் ஒரு நல்ல நாள் பார்த்து காரை வாங்கிவிட்டேன்.

சனிக்கிழமைகளில் படத்துக்கு செல்லும் வழக்கத்தை இன்னும் விடவில்லை. என்ன இப்போது அவ்வளவு பெரிய நண்பர் வட்டாரம் இல்லை, அவன் அவனுக்கு நலம் விசாரிக்க கூட நேரம் இல்லாமல் இந்த அவசர யுகத்தில் தொலைந்து போய்க்கொண்டிருக்கிறோம். என்னுடன் வேலை செய்யும் சக நண்பன் தான் நேராக தியேட்டருக்கு சென்று டிக்கெட் எடுத்து வைத்து காத்திருப்பதாக சொல்ல நான் புது காரில் தனியாக கிளம்பினேன். வானம் மழை மேகங்களால் சூழ்ந்திருக்க காற்றும் சில்லென்று வீச கார் கண்ணாடியை மெலிதாய் இறக்கி விட்டு மிதமாய் வண்டியை ஓட்டியபோது அருமையாய் உணர்ந்தாலும் "என்னடா இது அவசர பட்டு கடன் வாங்கி கார் வாங்கிட்டமோ, கொஞ்சம் காசு சேர்த்துட்டு வாங்கியிருக்கலாமோ.." என்ற எண்ணமும் வந்து சென்றது. மழை மெதுவாக தூர ஆரம்பித்தது கொஞ்ச தூரம் சென்றதும் சிக்னல் விழுந்தது மெதுவாய் காரை நிறுத்தினேன். வலது புறம் ஒரு பைக், அதில் மூன்று பேர். அவர்களை பார்த்ததும் பழைய நினைவுகள் வந்து சென்றது ஒரு வேலை கார் இல்லையென்றால் நாமும் இப்படி தான் இருந்திருப்போமோ?

பைக்கில் இருந்தவர்கள் காரை உற்றுப்பார்த்தார்கள், பின்னால் அமர்ந்திருந்தவன் முன்னாள் இருந்தவனிடம் ஏதோ சொன்னான். ஒரு வேலை "அப்பன் காசு என்னமா சீன் போடறான் பாரு!" என்றிருப்பானோ?.
Related Posts Plugin for WordPress, Blogger...