தமிழை மட்டுமே நம்பி ஒருவர் வாழ முடியுமா?

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த என் பல நண்பர்களுக்கு தமிழ் சரளமாக படிக்கவும் எழுதவும் தெரியாது ஆனால் இது அவர்களது அன்றாட வாழ்கையை இம்மி அளவும் பாதித்ததாக தெரியவில்லை. நம் அனைவர் மனதிலும் உள்ள ஒரு பொதுவான கருத்து, தமிழில் பல இலக்கிய படைப்புகள் இருக்கின்றன என்பதற்கு மேலாக என்ன இருக்கிறது? தமிழ் கற்றால் பேசினால் இன்றைய நவீன யுகத்தில் கிடைக்கும் அனுகூலங்கள் என்ன? தமிழை ஒரு மொழியாக அதை விட ஒரு தன்மான உணர்வாக பார்க்கிறோமே தவிர, தமிழ் சார்ந்த தொழில் என்று எதாவது ஒன்று இந்த உலகமயமாக்கல் புயலை தாங்கி நிற்கிறதா? நமது விடை இல்லை அல்லது தெரியாது என்பதாக இருக்கும். விதன்டா வாதத்திற்கு வேண்டுமானால் யாராவது விளக்கம் சொல்ல முயற்சிக்கலாம். 

சமீபத்தில் நான் பார்த்த சில தொலைக்காட்சி நிகழ்சிகளும் உரையாடல்களும் நம் தாய் மொழி தமிழ் மீது பல எண்ண மாற்றங்களை விட்டுச் சென்றிருக்கின்றன. தமிழை காக்க தமிழ் வழிக்கல்வி அவசியம் என்று பலர் சொல்கிறார்கள். தமிழ் வழிக்கல்வி என்பது எந்த அளவிற்கு சாத்தியம்? இன்றைய தமிழ் வழிக்கல்வி முறையில் என்ன நடக்கிறது? Maths என்பதை கணிதம் என்றும், Physics என்பதை இயற்பியல் என்றும், Chemistry என்பதை வேதியல் என்றும் மொழிபெயர்த்து கற்பிக்கிறார்கள், அதுவும் அரைகுறையாக. மேலோட்டமாக மொழி பெயர்க்க முடிகிறதே தவிர பாடத்தின் மூலத்தை மொழிபெயர்க்க முடிகிறதா? முடிவதில்லை. 

அது என்ன பாடத்தின் மூலத்தை மொழி பெயர்ப்பது? என்னதான் computer என்பதை கணிப்பொறி என்று சொல்லிக்கொடுத்தாலும், command என்பதை கட்டளை என்று மொழிபெயர்த்தாலும் அதை கம்ப்யூட்டரில் பிரகயோகிக்க முடியாது, செயல்முறையில் நீங்கள் ஆங்கிலம் தான் உபயோகப்படுத்தியாக வேண்டும். அதே போல் physics equation-யோ  chemistry equation -யோ தமிழில் எப்படி மொழிபெயர்க்க முடியும்? உதாரணத்திற்கு H2O என்பதை தமிழில் எப்படி மொழி பெயர்க்க முடியும்?

தமிழ் உன்னதமான மொழி, உயர்வான மொழி, இனிமையான மொழி, உயர் தனி செம்மொழி மறுப்பதற்கில்லை. பிறகு ஏன் ஆங்கிலத்தையும் பிற மொழிகளையும் நம் மக்கள் நாடி செல்கிறார்கள்? காரணம் தொழிற்கல்வி தமிழ் முறையில் குறைவு அப்படியே இருந்தாலும் தமிழ்நாட்டை தாண்டி வேலை வாய்ப்புகள் குறைவு. ஆங்கில வழி தொழிற்கல்விகள் வாங்கித்தரும் வேலை வாய்ப்புகளையும், சம்பளத்தையும் தமிழ் வழி தொழிற்கல்வி பலருக்கு வாங்கித்தருவதில்லை.

ஒரு மொழி, தன்மான உணர்வு என்பதை காட்டிலும் தமிழின் அவசியம் இன்றைய தலைமுறையினருக்கு என்ன? இதை இதையெல்லாம் செய்தால்தான் தமிழ் வளரும் என்றால் தமிழ் என்றோ அழிந்திருக்கும், தமிழ் ஒரு அழியா மொழி. தமிழில் உள்ள குறைகளை சொன்னால் உடனே நீங்கள் தமிழின துரோகி ஆகி விடுவீர்கள். வெளி நாடுகளில் வேலை செய்தாலோ, பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்கு சென்றாலோ தமிழனுக்கு அடிமை புத்தி என்பார்கள். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று அன்றே சொன்னவன் தமிழன்.  உலகமயமாக்கல் என்பதை இவ்வுலகம் அறிவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கடல் தாண்டி வணிகம் செய்தவன் தமிழன்.

எனது கருத்து, பல நூற்றாண்டுகளாக பலரால் வளர்ந்த தமிழ் ஒரு காலகட்டத்தில் திராவிட கட்சிகள் கையில் சிக்கி, தமிழை ஏதோ அவர்கள் மட்டுமே வளர்க தகுதி பெற்றவர்கள் என்பது போன்ற ஒரு மாயையை உருவாகி விட்டது. ஆங்கில மோகம் கூடாது ஹிந்தி எதிர்ப்பு என்று ஏதோதோ கூறி தமிழனை தமிழ்நாட்டிர்க்குள்ளாகவே முடக்கி விட்டார்கள். தமிழ் வாழவைக்கும் என்று சொல்கிறார்களே தவிர, நான் தமிழால் முன்னுக்கு வந்தவன், தமிழால் என் தொழில் சிறந்தது, தமிழ் மட்டுமே என்னை வாழ வைக்கிறது என்று யார் சொல்லியும் நாம் கேள்வி படுவதில்லை.

இந்த பதிவை கூட நான் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய அது தான் unicode தமிழாக மாறுகிறது. ஒரு மொழி, மொழி என்பதையும் தாண்டி பரவ வேண்டும், அனைவராலும் விரும்பப்பட வேண்டும் என்றால் இன்றைய காலச் சூழலுக்கு அது தொழில் நுட்பத்தாலும் விஞ்ஞானத்தாலும் மட்டுமே முடியும். தமிழ் சார்ந்த கண்டுபிடிப்புகள் வர வேண்டும் உதாரணமாக தமிழில் மட்டுமே இயங்கும் ஒரு கணினியும் இயங்கு மென்பொருளும் (Operating system) உருவாக்கப்பட வேண்டும். 

தமிழ் கல்வி என்பது மொழி பெயர்கப்படாமல் அதன் மூலமே தமிழாய் இருக்க வேண்டும். தமிழ் என்பது வெறும் மொழி, பழைய இலக்கியம், அரசியல் என்பதை தாண்டி தொழில் நுட்பத்தின் அவசியமாக அறியப்படும்போது, பிற நாடுகளில் தமிழ் கற்பிக்கப்பட்டு அவர்கள் தங்கள் மொழி அழிகிறது என்று கூறும் நிலமை வரலாம். இப்படி ஒரு நிலமை வந்தால் நாம் யாரையும் சென்று தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அதெல்லாம் முடியாது தமிழ் என்பது மொழி அது எப்படி தொழில்நுட்பமாக முடியும் என்று எண்ணினால் ஆங்கில வழி தொழிற்கல்வி கற்பதையோ தமிழை புறக்கணிப்பதையோ தவிர்க்க முடியாது. 

6 comments:

Anonymous said...

யதார்த்தமான பதிவு நண்பரே. கமலஹாசன் கூட இதைதான் சொன்னார். புதிய சொற்களை தேடுவதில் பழைய சொற்களை மறந்து விடுகிறோம் என்று. தொடரட்டும் மேலும் நல்ல பதிவுகள்! (madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com)

Philosophy Prabhakaran said...

// தமிழ் சார்ந்த கண்டுபிடிப்புகள் வர வேண்டும் உதாரணமாக தமிழில் மட்டுமே இயங்கும் ஒரு கணினியும் இயங்கு மென்பொருளும் (Operating system) உருவாக்கப்பட வேண்டும். //
இதைத் தான் நான் எதிர்பார்த்தேன்...

படம் சூப்பர்...

RVS said...

இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!!!
தாய்மொழியில் சிந்திப்பதே தமிழின் பெருமை!
நல்ல பதிவு ;-)

pichaikaaran said...

ய்தார்த்தமான ஒரு பதிவு...

விரிவான விவாதம் தேவை...

Anonymous said...

Same existentialist dilemma faces all Indian regional languages.

சர்பத் said...

அனைவரது வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி :)

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...